search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு மாவட்ட கலெக்டர்"

    பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

    மேலும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ரெட் அலர்ட் என்பது ஒரே சமயத்தில் மிக மிக கனமழை பெய்யும். யாரும் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கைதான் இந்த ரெட் அலர்ட்.

    இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதையொட்டி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் உஷாராக இருக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் முடுக்கி விட்டுள்ளார்.

    இது குறித்து கலெக்டர் கதிரவன் இன்று காலை ‘மாலை மலர்’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 113 இடங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக (தாழ்வான பகுதிகள்) அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, ஊரகத்துறை போன்ற அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களுக்கு இவர்கள் விரைந்து சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

    மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணையான பவானிசாகர் அணை மீண்டும் நிரம்பும் நிலையில் உள்ளது. உபரி நீரை திறக்க வாய்ப்புள்ளது.

    இதனால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பவானி ஆற்றின் கரையோரம் வருவாய்த்துறையினர் முகாம் அமைத்து நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.
    ×